டாக்டர். தா.ஏ.ஞானமூர்த்தி என்றொரு பேராசான்
![]() |
நூலறிபுலவர், சிந்தாமணிச்செம்மல், டாக்டர். தா.ஏ.ஞானமூர்த்தி. |
“மன்னா உலகத்து மன்னுதல்குறித்தோர்
தம்புகழ் நிறஇத் தாமாய்ந்தனரே”
எனும் சங்கச் சான்றோர் வாக்கிற்கிணங்க தண்ணார் தமிழ் வளர்த்த சான்றோராய், நிலையில்லா இந்நிலவுலகில் தம்புகழ் உருவினை நிலை பெறச்செய்து மறைந்தவர் தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்களாவர். புகழுடைய வாழ்வினராய் எடுத்துக்காட்டான வாழ்வினராக விழுமிய வாழ்வு வாழ்ந்தவர் அவர். அன்பு அருளாய்க் கனிந்த அவரின் வாழ்வு இளைஞர்கள் போற்றிப் பின்பற்றத்தக்க உயரிய வாழ்வு. இத்தகு சிறப்புக்குரிய டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்களின் சீரிய வாழ்வியலையும் குன்றாச் சிறப்புக்களையும் விளக்கும் பொருட்டு எழுந்ததே இக்கட்டுரை என்க.
பெருமைப் பண்புடையோர் :
‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பதை அடியெற்றி உயர்ந்தோராக வாழ்ந்தவரின் வாழ்வே வாழ்க்கைக் கலையாகவும் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகவும் போற்றப்பெறும். இவ்வுலகிற் பலர் எவ்விதப் புகழுமின்றி ஒவ்வொரு கணமும் மறைகின்றனர். அவர்கள் அனைவரும் பெரியோரால் போற்றப்படுவதில்லை. ஆயின், ‘புகழுடன் மறைவோரே பிறந்தவராவர்’ எனும் பேருண்மையை உணர்ந்து தம் வாழ்வைப் புகழடைய வாழ்வாகவும் பெருமைப் பண்புடையதாகவும் மாற்றுவோரே பெரியவராலும் உலகத்தோராலும் போற்றப்படுவர். இவர்தம் வாழ்வே இவ்வுலகம் உள்ள அளவும் போற்றியொழுகும் தன்மையுடையதாக விளங்குகிறது.
இங்ஙனம் பெருமைப் பண்புடனும் பெரியோர் புகழும் படியாகவும் வாழ்வாங்கு வாழ்ந்தவரே டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி ஆவர்.
தா.ஏ.ஞா அல்லது தாயே ஆனவர் :
‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்னும் சான்றோர் வாக்கிற்கு இலக்கணமாய்த்தம் வாழ்நாளெல்லாம் ஒல்லும் வகையான் தமிழ்ப்பணியாற்றித் தமிழால் தானும் தன்னால் தமிழும் வளம் பெறுமாறுச் செய்தவர் டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி ஆவர். மாணாக்கர்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அச்சான்றோர், மாணவர் பருவத்தில் கல்லூரிக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ சென்று பயிலாதவர். தாமே அரிதின் முயன்று தமிழ் பயின்று, மாணாக்கர் பலர் தம்கீழ் ஆய்வு செய்து பட்டம் பெறுதற்கு மட்டுமின்றி வாழ்வியல் வழிகாட்டியாகவும் அமைந்தவர்.
‘கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பசுந்தமிழ்’ என்பதற்கேற்ப பூ.சா.கோ கலைக் கல்லூரியில் அமர்ந்து தமிழாய்ந்த தலைமகனார்; சான்றோர் போற்றும் புகழ்பூத்த வாழ்வு வாழ்ந்த பெற்றியர்; வாழ்வாங்கு வாழ்ந்து இறவாப் புகழுடம்பு பெற்றவர்; தம் வாழ்வைப் பிறர் கண்டு கற்றுப் பயன் பெறும்படி எடுத்துகாட்டான வாழ்வு வாழ்ந்த பெருமைந்தகையர்.
“எளிமைக்கும் அன்பிற்கும் இடைவிடா உழைப்பிற்கும் இருப்பிடமாய் விளங்கிய எங்கள் பேராசிரியர் டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்களைத் ‘தாயே’ என உள்ளம் உருக அழைத்து மகிழ்வோம்” -என்று அன்னாரின் அன்பு மாணாக்கர்கள் உளம் நெகிழ்ந்து கூறுவர், அன்பும் பண்பும் எளிமையும் ஒன்றிணைந்து விளங்கும் தாய் நிகர்த்த தயையுடைய டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்களைத் ‘தாயே’ என அழைத்து மகிழ்ந்தமைச் சாலவும் பொருத்தமுடையதன்றோ!
வாழ்வாங்கு வாழ்ந்த தா.ஏ.ஞா. அவர்களின் வாழ்வை அறிந்து அவர் வாழ்ந்து காட்டிய நெறியில் வாழ்தல் நம் கடமையாகும். ஆகலின், தமிழ்ப்பேராசிரியராய்; மாணாக்கருக்கு வாழ்வியல் வழிகாட்டியாய்; அன்புத்தந்தையாய்; தமிழ் நாடகக்கலைப் படைப்பாளியாய்; சிந்தாமணிச் செம்மலாய்த் தொண்டாற்றிய நூலறிபுலவர் டாக்டர் தா.ஏ. ஞானமூர்த்தி அவர்களின் வரலாற்றையும் சிறப்பையும் இனிக் காண்போம்.
ஊரும் பேரும் :
தொண்டைநாட்டுத் திருத்தலங்களுள் இருபத்தி நான்காவது திருத்தலம் மயிலாப்பூர். திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்ற தலம். அம்பிகை மயில் வடிவில் சிவபெருமானைப் பூசித்த தலம். வாயிலார் நாயனார் திருவவதாரஞ் செய்த பதியுமாம். அத்தகு புகழ்பெற்ற மயிலாப்பூர் சென்னை மாநகரின் நடு நாயகமாக அமைந்துள்ளது. இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை முதலிய ஊர்களைக் கொண்ட ஒரு இடமாகத் திகழ்வது மயிலாப்பூர். இம்மயிலைக் கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்வார்ப்பேட்டையே அன்பிற்கும் பண்பிற்கும் உறைவிடமாக விளங்கிய நம் பேராசிரியர் டாக்டர் தா.ஏ.ஞா - வின் முன்னோர் வாழ்ந்த ஊராம்.
இருமுதுகுரவர் :
![]() |
தா.ஏகாம்பரம் |

அன்பும் பண்பும் நிறைந்த ஏகாம்பரம் - இராசம்மாள் இணையர் தம்இல்லறக் கடன்களை இனிதே ஆற்றி வந்தனர். இவ்வில்லற வாழ்வின் பயனாய்த் தோன்றிய தலைமகவே நம் பேராசிரியராவர். டாக்டர். தா.ஏ.ஞா. அவர்கள் இவ்வுலகில் தோன்றுவதற்குப் பெருமை பெற்ற நாள் 1911-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 13-ஆம் நாளாம்.
கல்வி :
டாக்டர். தா.ஏ.ஞா. அவர்கள் மயிலைப் பெனாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 1930-ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் சிறப்புறத் தேர்ந்தார்கள். இவர்கள், பேரறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்களிடமும் குருதேவர் தெ.பொ.மீ. அவர்களிடமும் முறையே தமிழ்பயின்று 1942-ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் சிறப்புறத் தேர்ச்சி பெற்றார்கள்.
![]() |
வித்துவான் பட்டம் பெற்ற தா.ஏ.ஞா. |
1946-ஆம் ஆண்டு பி.ஓ.எல். பட்டமும் 1950-இல் தமிழ் எம்.ஏ. பட்டமும் பெற்றார்கள். 1955-ஆம் ஆண்டில் குருதேவர் தெ.பொ.மீ. அவர்களின் மேற்பார்வையில் டாக்டர் பட்டத்திற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்ட தா.ஏ.ஞா. அவர்கள், சீவகசிந்தாமணியைப் புதியக் காப்பியக் கொள்கைகளுடன் ஒப்பிட்டாய்ந்து, 1962-ஆம் ஆண்டு "A CRITICAL STUDY OF CIVAKACINTAMANI" என்னும் ஆய்விற்காகப் பி.எச்.டி. பட்டம் பெற்றார்கள்.
தமிழாய்வில் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற முதல் தலைமுறையைச் சார்ந்த முதல் பத்துப் பேராசிரியர்களுள் ஒருவர் தா.ஏ.ஞா. அன்றியும், கோயம்புத்தூரில் தமிழாய்வில் முதன்முதலாக ‘டாக்டர்’ பட்டம் பெற்றவரும் இவரேயாவர்.
இல்வாழ்க்கை :
![]() |
தா.ஏ.ஞா. - மரகதம் அம்மையார் |
சென்னையிலுள்ள சிந்தாதிரிப்பேட்டையில் இலட்சுமணசாமி என்போர் பெருஞ் செல்வந்தராக வாழ்ந்து வந்தார். இவருக்குப் பிள்ளைகள் ஐவர். அவ் ஐவருள் இறுதியிற் பிறந்த செல்வ மகளே ‘மரகதம்’ அம்மையாராவார். இவ்வம்மையார் அறிவுந்திருவும் அழகும் ஆழ்ந்த பக்தியும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். இவர்களே நம் பேராசிரியரவர்களின் வாழ்க்கைத் துணைநலமாக அமைந்தவர். தா.ஏ.ஞானமூர்த்தியார் - மரகதம் அம்மையார் திருமணம் சென்னையில், 1937-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 9-ஆம் நாள் மத்தளங்கொட்ட் வரிசங்கம் நின்றூத ஊரார் போற்றும் வகையில்; உயரிய முறையில்; குன்றாச்சிறப்புடன் நிகழ்ந்தது.
சிறப்பிற்குன்றா செய்கையோடு பொருந்திய பிறப்பிற்குன்றா பெருந்தோள் மடந்தையான மரகதம் அம்மையார் தம் கணவர் உளமறிந்து செயல்படுந்தன்மையர்; கணவர் குறிப்பறிந்து அன்போடு பழகுந்தன்மையர் ; அவரின் இயல்பிற்கேற்பத் தம்மை மாற்றிக் கொண்ட பெண்ணின் நல்லாள்.
![]() |
தா. ஏ.ஞா.வின் குடும்பம் |
அன்புகெழுமிய இக்காதலரின் இனிய வாழ்க்கையின் பயனாய் ஆண்மக்கள் அறுவர் தோன்றினர். அவர்கள் முறையே கிருபாகரன், உமாமகேசுவரன், சோமசுந்தரம், முருகன், அசோகன், குகன் ஆகியோராவர். அருமை மக்கள் அறுவரும் மருத்துவராகவும் பொறியாளராகவுந் திகழ்கின்றனர்.
தமிழ்ப்பணிகள் :
‘கல்வித் தொண்டே கடவுட் தொண்டு’ எனும் ஆன்றோர் வாக்கினை மனங்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட பூ.சா.கோ. கலைக் கல்லூரியின் முதல் தமிழ்த் துறைத்தலைவர் பணியை, 1948-ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 17-ஆம் நாள் நம் பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள் ஏற்றார்கள். தா.ஏ.ஞா. தாம் பதவியேற்ற 1948-ஆம் ஆண்டு முதலே கல்லூரியை ‘அறிவு அன்பு பணி’ என்னும் முக்குறிக்கோளுடையதாக மாற்றி கல்லூரியின் வளர்ச்சிக்காக அரும்பாடு படலானார். அறிவுலகின் திறவுகோலான கல்லூரி வளர்ச்சியுற்றதெனில் மாணாக்கரும் அறிவுபெற்று உயருவதென்பது இயல்பன்றோ?
டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கட்கு பூ.சா.கோ. கல்லூரித் தமிழ்த்துறையைப் பல்கலைக் கழகத்தையொத்த தமிழாய்வுத் துறையாக மாற்ற வேண்டுமென்ற பேரவா இருந்துவந்தது. அதற்காக ஒல்லும் வகையெல்லாம் முயன்று வந்தார். அம்முயற்சியின் விளைவாய் 1967-ஆம் ஆண்டு பூ.சா.கோ. கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பைத் தோற்றுவித்தார். அன்றுதொட்டு தா.ஏ.ஞா. அவர்கள் தமிழ் முதுகலைப் பேராசிரியராகவும் ஆராய்ச்சிப் பேராசிரியராகவும் பணியேற்றார்.
பல்கலைக் கழகங்களில் மட்டுமே தமிழ் எம்.ஏ. வகுப்புகள் நடத்தப்பெற்று வந்த காலத்தில் 1967-இல் பூ.சா.கோ. கல்லூரியில் தமிழ் எம்.ஏ. வகுப்பைத் தோற்றுவித்துத் தமிழாய்விற்கு வழிவகை செய்து வெற்றி கண்டபோது தா.ஏ.ஞா.வின் நெஞ்சம் எத்துணைப் பூரிப்படைந்திருக்கும் என்று இயம்பவும் வேண்டுமோ!
தமிழாய்வுத் துறை :
![]() |
குருதேவர் தெ.பொ.மீ.யுடன் தா.ஏ.ஞா. |
பூ.சா.கோ. கல்லூரியில் பெருமைமிகு தமிழ் முதுகலை வகுப்பைத் தொடங்கிய தா.ஏ.ஞா. அவ்வளவுடன் அமைந்தாரல்லர். எம்.ஏ. வகுப்பு கொண்ட தமிழ்த்துறையைத் தமிழாராய்ச்சித் துறையாக மாற்றுவதற்காக அக்கல்லூரியில் தமிழில் பி.எச்.டி., எம்.லிட்., பட்டப் படிப்புகளும் தோற்றுவிக்கப்பட வேண்டுமென எண்ணி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆவணஞ் செய்து வெற்றியுங் கண்டார். மாணவரின் உயர்கல்வியும் ஆராய்ச்சியும் வளரவும் தமிழாராய்ச்சித் துறையாகக் கல்லூரி மேன்மையடையவும் பூ.சா.கோ. கலை அறிவியற் கல்லூரியில் பி.எச்.டி., எம்.லிட்., பட்டங்களும் தா.ஏ.ஞா அவர்களால் தோற்றுவிக்கப்படலாயிற்று. பூ.சா.கோ. கல்லூரியின் தமிழ்த்துறை தமிழ் உயராய்வு மையமாயிற்று. பூ.சா.கோ. கல்லூரியின் தமிழ்த்துறை பல்கலைக்கழகத்தை நிகர்த்ததாகத் தமிழாய்வுத் துறையாயிற்ரெனில், அதற்கு மூலகாரணம் தாம் பணியேற்ற கல்லூரியைப் பொலிவுறச் செய்து, மாணவர்களை வளம்பெறச் செய்வதில் தா.ஏ.ஞா. கொண்ட தணியா வேட்கையே என்பது வெள்ளிடைமலையாம்.
தா.ஏ.ஞா.வின் பேராசிரியத்திறம்
பேராசிரியர் தா.ஏ.ஞா. அவர்கள், எளிய உடைகளையே விரும்பியணிவார். குறிப்பாகத் தூய எளிய வெள்ளை நிற மேற்சட்டையை விரும்பி உடுத்தி மகிழ்வார். அவர் கருநிறமேனியினராயினும் முகத்தில் எப்போதும் அஞ்சன ஞாயிறு எனத்தகும் பொலிவு விளங்கும். தூக்கிவாரிய தலைமுடி, அழகிய மூக்குக் கண்ணாடி என அன்பே உருவாய் விளங்குவார். இவரின் பேராசிரியத் திறனை மாணவர்கள் மதித்துப் போற்றினர். பேராசிரியர்கள் ஏற்றுப் பின்பற்றி ஒழுகினர். பேராசிரியர் தா.ஏ.ஞா. அவர்கள் எந்த ஒன்றையும் உரிய வேளையில் செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடையவர். தான் கொண்ட குறிக்கோளுக்கேற்ப எதையும் குறித்த நேரத்தில் முறையாகச் செய்து முடிக்கும் தன்மையர்.
வகுப்புநடாத்தும் திறம் :
இத்தகு அருங்குணங்களுடைய தா.ஏ.ஞா. மாணவர்கள் மனங்கொள்ளுமாறு பாடம் நடத்தும் சிறப்புப் பெற்றவர். மாணவர்களின் ஐயங்களைப் போக்குவதிலும், மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவதிலும் தனிக்கவனம் செலுத்தியவர். இலக்கியத் திறனாய்வியலையும், கலிங்கத்துப்பரணியையும், காப்பியங்களையும், இலக்கணங்களையும் மிகச் சிறப்போடு நடத்தும் திறம் பெற்றவர்.
இலக்கியத் திறனாய்வியலை நடத்தும்போது, மேனாட்டுத் திறனாய்வாளரான ஹட்சன், ஐ.ஏ.ரிச்சட்ஸ், வின்செஸ்டர் போன்றோரின் திறனாய்வு நூல்களைக் கற்று வந்து, மாணவர்க்கு விளங்கும் வகையில் எளிய தமிழில் திறனாய்வுக் கோட்பாடுகளை எடுத்துரைப்பார். மேனாட்டுத் திறனாய்வு ஆங்கில நூல்களை வாசித்துக்காட்டி மாணவர் உள்ளத்தில் பதியவைப்பார். தா.ஏ.ஞா. அவர்கள் அருந்தமிழுடன் ஆங்கிலப்புலமையும் பெற்றவராதலின் மேனாட்டுத் திறனாய்வு நூல் நயங்களை எல்லாம் மாணாக்கர் எளிதில் அறிந்து கொள்ள இயன்றது.
இலக்கண வகுப்புக்களைப் பொறுத்தமட்டில் இலக்கணங்களை இலக்கியங்களாகச் சுவைபட நடத்துவார். கலிங்கத்துப்பரணியைக் கற்பிக்கும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்தோடும் செயல் திறனோடும் உணர்வு பொங்க நடத்துவாராம். தா.ஏ.ஞா. அவர்கள் பெரிதும் மதித்துப் போற்றிய சீவகசிந்தாமணிக் காப்பியத்தைக் கற்பிக்கும்போது காப்பியத் தலைவன் சீவகனை அக்காலத் தமிழறிஞர்கள் பார்த்த பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ‘சீவகன் காமுகன் அல்லன், கலைஞன்’ என உறுதியாகக் கூறி மாணவர்களின் மனத்தில் பதிய வைப்பாராம். ஒவ்வொரு வகுப்பிலும் சிந்தாமணி நயங்களைத் தெளிவாகவும் நுட்பமாகவும் உரைப்பார். இதர பாடங்களைவிடக் காப்பியங்களைக் கற்பிக்கும்போது அன்னாரின் முகம் மலர்ச்சியோடு விளங்குமாம், தா.ஏ.ஞா. விற்கு மிகவும் விருப்பமான குறள்,
“கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்” – (குறள் 1123) என்பதாம்.
ஆராய்ச்சிப் பேரறிஞர் :
1948 - ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பூ.சா.கோ. கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகச் சேர்ந்த தா.ஏ.ஞா. 24 ஆண்டுகாலம் தமிழ்ப்பணியாற்றிய பின் 1972-ஆம் ஆண்டு மேத் திங்கள் ஓய்வு பெற்றார். அவ்வாண்டே சூன் திங்களில் பல்கலைக்கழக மானியக் குழு தா.ஏ.ஞா. விற்கு ‘ஆராய்ச்சிப் பேராசிரியர்’ (EMERITUS PROFESSOR) என்னும் பதவியளித்து பூ.சா.கோ. கல்லூரியில் மீண்டும் பணியேற்கச் செய்தது.
தா.ஏ.ஞா. தமிழாராய்ச்சிப் பேராசிரியராகப் பணியேற்ற காலத்தில், பல மாணவர்களும், ஆசிரியர்களும் இவரின் மேற்பார்வையில் வழிகாட்டுதலில் எம்.லிட்., பி.எச்.டி. ஆராய்ச்சிப்பட்டம் பெற்றனர். குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியராக இருந்த
![]() |
உரைவேந்தருடன் தா.ஏ.ஞா. |
டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியேற்ற பிறகு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் எம்.லிட்., பி.எச்.டி. ஆராய்ச்சிக்கு டாக்டர் தா.ஏ.ஞா. ஒருவரே வழிகாட்டியாக இருக்க நேர்ந்தது என்பது இவரின் தனிப்பெருஞ் சிறப்பாம். இவ்வாறாக, ஆராய்ச்சிப் பேராசிரியராயிருந்து தமிழ்த்தொண்டாற்றி, 1982 -ஆம் ஆண்டு மேத் திங்கள் டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கள் ஓய்வு பெற்றார். இவர் நெறியாண்மையில் ஆய்வு செய்து மூவர் எம்.லிட். பட்டமும், 29 பேர் பி.எச்.டி. பட்டமும் பெற்றுள்ளனர்.
தமிழாராய்ச்சிக்கான பணிகள் :
ஆராய்ச்சிப் பேராசிரியராகத் தமிழ்ப்பணியாற்றிய தா.ஏ.ஞா. பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழாய்வுத்துறையைத் தொடங்க அரும்பாடுபட்டார். அவ்வகையில், அக்காலத்தில் தொடங்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையைத் தொடங்குவதற்கு உரிய வழி வகை செய்து வெற்றியும் கண்டார். இங்ஙனமே கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலும் தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் தகுதியான நெறியாளர் இல்லாமையால் எம்.லிட்., பி.எச்.டி. ஆய்வு செய்து பட்டம்பெற இயலாமல் தவித்தனர். இந்நிலையைக் கண்ணுற்ற தா.ஏ.ஞா. 1972-ஆம் ஆண்டு பூ.சா.கோ. கல்லூரியை அப்பல்கலைக்கழகத்தின் ஆய்விருக்கையாக மாற்றி, அப்பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் எம்.லிட்., பி.எச்.டி. பட்டங்கள் பெறுவதற்கு வழிவகை செய்து, தமிழாராய்ச்சிக்குத் தக்க தொண்டாற்றினார். இங்ஙனமே, அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தைத் தொடங்கியவர்களுள் தா.ஏ.ஞா. அவர்களும் ஒருவர். இம்மன்றம் தொடங்கப்படுவதில் இவரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாம்.
பங்கேற்ற துறைகள் :
தா.ஏ.ஞா. அவர்கள் தொடர்ந்து ஒன்பதாண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரவை (செனட்) அங்கத்தினராக இருந்தார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தமிழ்ப்பாடத் திட்டக்குழுவில் இருந்து பணியாற்றியிருக்கிறார் என்பதும் நினைவு கூரத்தக்கதாம்.
கலைக்கதிர் இதழ்ப்பணி :
தா.ஏ.ஞா. தமிழ்த்துறைத்தலைவர் பணியேற்ற சில ஆண்டளவிலேயே பூ.சா.கோ. கலைக்கல்லூரி, பூளைமேட்டிலிருந்து மக்கள் வானூர்தி நிலையம் (இன்று பன்னாட்டு விமான நிலையம்) அருகில் புதிதாக எழுப்பப்பட்ட கட்டடத்திற்கு இடம் மாற்றப் பெற்றது. இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட கல்லூரியின் சூழல் தா.ஏ.ஞா. விற்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. அம்மகிழ்வோடே தா.ஏ.ஞா. கல்வித் தொண்டாற்றலானார்.
கல்லூரி ஆணையாளர் திரு.ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் பலபோழ்து தா.ஏ.ஞா. விடம் கலந்தாலோசனை செய்தும் கருத்துக்களைக் கேட்டும் பல செயல்களைச் செய்து வரலானார். அவ்வகையில் தா.ஏ.ஞா. திரு.ஜி.ஆர் தாமோதரன் அவர்களைத் ‘திங்களிதழ்’ ஒன்றினைத் தொடங்கிப் பத்திரிகைத் தொண்டாற்றும்படிப் பணித்தார். ‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி’ பத்திரிகையன்றோ!.
தா.ஏ.ஞா.வின் பரிந்துரையை ஏற்ற திரு.ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள் திங்களிதழ் ஒன்றைத் தொடங்க முன்வந்தார். அவ்விதழுக்கு என்ன பெயர் சூட்டுவது? தா.ஏ.ஞா. விடம் வினவினார். தா.ஏ.ஞா. நன்கு யோசித்து, ‘கலைக்கதிர்’ எனப் பெயர் சூட்டும்படி நவின்றார். ‘கலைக்கதிர்’ என்பதன் பொருள் விளங்காத திரு.ஜி.ஆர்.தாமோதரன் அவர்கள், இப்பெயரின் பொருள்தாம் யாதோ? என வினவ, தங்களின் மூத்தமகன் பெயராகிய ‘வித்தியபிரகாஷ்’ என்பதன் தமிழாக்கமே ‘கலைக்கதிர்’ என்பதாம்! என்றார். திரு.ஜி.ஆர். தாமோதரன் அவர்களின் உள்ளம் பூரித்தது. பெயர் சூட்டுதலில் தா.ஏ.ஞா.வின் பெற்றிமையைத்தாம் என்னென்பது !
இங்ஙனம் ‘கலைக்கதிர் திங்களிதழ்’ 1949-ஆம் ஆண்டு தன் கதிரொளியைப் பரப்பத் தொடங்கியது! இவ்விதழின் உதவியாசிரியராகத் தா.ஏ.ஞா. பொறுப்பேற்றார். அறிவியல் தமிழை வளர்த்தலும், தமிழாராய்ச்சியை வளர்த்தலுமே இவ்விதழின் உயரிய நோக்கங்களாம். இவ்விதழில் பூ.சா.கோ. கல்லூரியின் இயற்பியல் துறைப்பேராசிரியர்களும், தாவரவியல், விலங்கியல், புள்ளியல், வேதியியல் துறைப் பேராசிரியர்களும் சென்னைப் பல்கலைக்கழக உளவியல் துறைப்பேராசிரியரான
![]() |
துணைவேந்தர் சை.வே.சிட்டிபாபு அவர்களுடன் தா.ஏ.ஞா. |
டாக்டர் தா.ஏ.சண்முகம் அவர்களும் குருதேவர் தெ.பொ.மீ. அவர்களும் டாக்டர் மு.வ. அவர்களும் டாக்டர் சை.வே. சிட்டிபாபு அவர்களும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தனர். தா.ஏ.ஞா.வும் அறிவியல் தமிழாராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வரலானார். அதோடு கலைச்சொல்லாகப் பணியும் கலைக்கதிர் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. கலைச்சொல்லாக்கத்திற்கான இலக்கணங்களும் வெளியிடப்பட்டன. இதழில் வெளிவந்த கலைச்சொற்களைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டனர். இவ்வகையில் கலைச்சொல்லாக்கப் பணியில் கலைக்கதிர் இதழ் மிகப்பெரிய புரட்சி செய்தது. பூ.சா.கோ. கல்லூரியின் தமிழ்மன்ற விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் கலைக்கதிர் இதழ்ப் பணியைப் பாராட்டும் முகத்தான். “தற்காலத்தில் வெளிவரும் பல பத்திரிக்கைகள் நூல் நிலையங்களுக்கு ஏற்றனவாக இல்லை. அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றனவாக இல்லை.
![]() |
மு.வ., ரா.பி.சே., அவர்களுடன் தா.ஏ.ஞா. |
ஆனால் ‘கலைக்கதிர்’ அக்குறையை நிறைவு செய்கின்றது என்று கூறலாம். அதைப் படிப்பவர்கள் அறிவுபெற வாய்ப்பு உண்டு. ‘கலைக்கதிர்’ அதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நிலையில் அதன் சிறப்பை மறக்க முடியாது. ‘கலைக்கதிரில்’ காணும் செய்திகள் வாழ்க்கைக்கு மிக உதவியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளன என்பது மறுக்க முடியாததாகும். தொண்டு செய்யவும் வழிகாட்டுகின்றது. ‘கலைக்கதிர்’ உண்மையில் கலையின் கதிராய்த் திகழ்கின்றது” என்று புகழாரம் சூட்டினார். இவ்வகையில், தமிழில் அறிவியல் வளர வேண்டும் என்பதற்காக முதன் முதலாய்த் தொடங்கப்பட்ட இவ்விதழின் அறிவியல் தமிழ்ப்பணி மிகப்பெரிது.
நாடகக்கலைப் படைப்பாளர்
இளம் பருவத்துணிவு :
டாக்டர் தா.ஏ.ஞா.விற்கு இளமைப்பருவ முதலே நாடகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்து வந்துள்ளது. நாடகத்தின் மீது தனக்கிருந்த விருப்பம் பற்றி, தெய்வஒளி – முன்னுரை தா.ஏ.ஞா.) என்று அவரே விதந்து கூறுவார். இவ்வாறு, நாடகத்தின் மேல் தான் கொண்டிருந்த வேட்கையின் காரணமாக, தாமே நாடகம் நிகழத்தவும், எழுதவும் வேண்டுமென எண்ணி, சில நாடகங்களை நிகழ்த்தியும், அக்காலத்திலேயே தம் நண்பர்களுக்கு நாடகப் பயிற்சியும் கொடுத்தமை பற்றி, அவரே உவகையுடன் கூறுகின்றனர். அவர் கூறுவதைக் கேண்மின்:-
“என் உயர்நிலைப் பள்ளிப்படிப்பு முடிவுற்றதும் யானே நாடகங்கள் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்காக என் நெருங்கிய நண்பர்கள் சிலரை ஒன்று சேர்த்தேன். அக்காலத்தில் ‘வள்ளிதிருமணம்’, ‘கோவலன்’, ‘லலிதாங்கி’, ‘சாரங்கதரா’, ‘குலேபகாவலி’, ‘ஞானசவுந்தரி’, ‘நந்தனார்’ இன்னோரன்ன நாடகங்களே பெரும்பாலும் நடிக்கப்பெற்றன. எனவே, அக்காலத்திற்கேற்ப ‘வள்ளிதிருமணம்’ என்ற நாடகத்தை நடிக்க யான் முடிவு செய்தேன். யானே நாடக நெறியாளனாக (Director) இருந்து, என் நண்பர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்தேன். நடிப்பு முறைகளைப் பற்றி அப்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. பல நாடகங்களைப் பார்த்திருந்ததால், அவற்றினின்றும் யான் அறிந்த சில நடிப்பு முறைகளையொட்டி என் நண்பர்களுக்குப் பயிற்சி தந்தேன். நாடகத்திற்கு ஆர்மோனியம் இசைத்துப் பின்பாட்டும் பாடினேன். அவ்விளம்பருவத் துணிவை இப்போது நினைந்து வியக்கின்றேன். அக்காலத்தில் மேடையில் நடிகர் பாடும் பாட்டுக்களுக்குப் பின்பாட்டுப் பாடும் வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் தற்போது மறைந்து விட்டது. எம் வள்ளிதிருமணம் ஓரளவு வெற்றி எய்தியது எனலாம். இந்நாடகம் 1930-ஆம் ஆண்டில் நடைபெற்றது” (தெய்வ ஒளி – முன்னுரை) என்று தம் இளம் பருவத்துணிவையும் நாடகக் கலையின் மீது தான் கொண்டிருந்த தணியா வேட்கையையும் தா.ஏ.ஞா. அவர்கள் புலப்படுத்தி மகிழ்கிறார்.
இவ்வாறே, தான் நிறுவிய ‘கலைபணி பயிற்சிக் கழகத்து 1941-ஆம் ஆண்டின் ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடகம் ஒன்று நடத்த முடிவு செய்து, ‘சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தை’ இவர் நாடகமாக எழுதினார். அந்நாடகம் தமிழ்முனிவர் திரு.வி.க. அவர்களின் தலைமையில் நடிக்கப்பெற்றதாம்.
கோவை நாடகக் கலைக் கழகம் :
நாடகக்கலையின் அருமை பெருமைகளை உணர்ந்து மாணவர்கள் அந்நாடகக்கலையின் பயிற்சி பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு பூ.சா.கோ. கல்லூரியில் தொடங்கப்பட்டது. ‘நாடகக்கலை மன்றம்’ ஆகும். அங்ஙனமே, மக்களிடம் நாடகக் கலையைக் கொண்டு சேர்த்து, வளர்த்தெடுக்க வேண்டுமென்ற பெருநோக்கத்தோடு தா.ஏ.ஞா. அவர்கள் கோவை மாநகரில் ‘கோவை நாடகக்கலைக் கழகம்’ என்னும் நாடகக் கழகத்தைத் தோற்றுவித்தார்கள். “அருங்கலை உயர்பண்பு பெருவாழ்வு” என்பது இக்கழகத்தின் குறிக்கோளாம். இக்கலைக் கழகம் வாயிலாக, மாணவர் பலருக்கு நாடகக்கலையைப் பயிற்றுவித்து நாடகங்களை நடிக்கவும் செய்துள்ளார்.
நாடகப் படைப்பாளரான தா.ஏ.ஞா. அவர்கள் பல நாடகங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் ஐந்து நாடகங்கள் மட்டுமே நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. இவரால் எழுதப்பெற்ற நாடகங்கள் பலவும் எவ்வித மாற்றமும் செய்யாமல் மேடையில் நடித்ததற்குத் தகுந்தமுறையில் எழுதப்பெற்றவை என்பது தனிப்பெருஞ்சிறப்பாம். இவரின் நாடகங்கள் பலவும் ‘கோவை நாடகக் கலைக்கழகத்திலும்’ கல்லூரி ‘நாடக மன்றத்திலும்’ பன்முறை நடிக்கப்பெற்ற சிறப்பினையுடையவை. குறிப்பாக ‘படித்தவன், அமராபரணம், தெளிந்த நீரோடை, சுடரும் பொன், பொன்மலர்,
![]() |
பொன்மலர் நாடகத்தில் தா.ஏ.ஞா. |
உயிரோவியம்’ எனும் நாடகங்கள் நாடகக் கலைக்கழகத்தால் அரங்கேற்றப்பட்டுப் பலராலும் பாராட்டப் பெற்றவை என்பதும் சுட்டத்தக்கதாம். இவருடன் பணியாற்றிய தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் திரு. ம.ரா.போ குருசாமி அவர்கள், திரு.ஈகோ. பாஸ்கரதாஸ் அவர்கள் போன்றோரும் இயற்பியல் பேராசிரியர் திரு. கருப்பண்ணன் அவர்கள், வணிகவியல் பேராசிரியர் திரு. சுந்தர்ராஜ் அவர்கள் என்றின்னோரன்ன பேராசிரியர்கள் இவரின் நாடகங்களில் பல்வேறு வேடமேற்று நடித்துள்ளனர். அவ்வளவு ஏன் பூ.சா.கோ. கல்லூரி முதல்வர் திரு.போ.ரா.கிருட்டினமூர்த்தி அவர்களே ஒருசில பாத்திரங்களின் வேடமேற்று நடித்துள்ளார் எனில் இவர்களனைவரும் தா.ஏ.ஞா. அவர்களின் நாடகங்களில் காட்டிய ஈடுபாட்டை என்னென்பது !
![]() |
பொன்மலர் நாடகக்குழுவினர் |
நடிகர் நாகேஷ் :
இவரின் நாடகக் கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று நாடகத்திறனை வளர்த்துக் கொண்டு உயர்நிலையடைந்தோர் பலர், அவருள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர் ‘நடிகர் நாகேஷ்’ அவர்களாவர். நடிகர் நாகேஷ் அவர்கள் தா.ஏ.ஞா.வின் மாணவர். இவரின் நாடகப் பயிற்சிப் பட்டறையில் சிறப்பாகப் பயிற்சி பெற்றவர். அன்னாரிடம் நாடகப் பயிற்சி பெற்றுப் பல்வேறு நாடகங்களில் நடித்தவர். நாகேஷ் அவர்களிடம் உள்ளிட்ட விளக்காக இருந்த நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்து வெள்ளிடைமலையாக உலகறியச் செய்தவர் டாக்டர். தா.ஏ.ஞா. அவர்களே என்பது நீள நினையத்தகும் சிறப்பியல்பாம்!.
நாடகத்தில் தணியாவேட்கை :
அகத்தா கிறிஸ்டி (Agatha Christie) அவர்களால் எழுதப்பெற்று 1952-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6-ஆம் நாள் முதல் இலண்டன் மாநகரில் 62 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேடையாக்கம் செய்யப்பெற்று வரும் உலகப் புகழ்பெற்ற “The Mousetrap” நாடகத்தைக் காணவேண்டும் என்ற பேரார்வங் கொண்ட தா.ஏ.ஞா. அவர்கள் இலண்டன் மாநகரம் சென்று ஆர்வத்தோடு அந்நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள் என்பதும் அன்னாரின் நாடக ஆர்வத்திற்கு தக்க சான்றாம்.
நாடகக்கலையில் பேராரர்வங் கொண்ட தா.ஏ.ஞா இளைஞர்களுக்கு நடிப்புக் கலையில் அறிவியல் முறையோடு பயிற்சி தரும்பொருட்டு ‘நாடகக்கலைக்கல்லூரி’ ஒன்றனை நிறுவ அரிய முயற்சிகள் செய்து வந்தார் என்பதும் பேராற்றல் படைத்த நாடகக்கலை வாயிலாகத் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் விரைந்து வளர்க்க முடியும் என்று தா.ஏ.ஞா. அவர்கள் உறுதியாக இருந்து வெற்றியுங்கண்டார் என்பதும் எண்ணி மகிழத்தக்கதாம்.
இவ்வாறு தா.ஏ.ஞா. அவர்கள் நாடகக்கலையில் கொண்டிருந்த தணியா வேட்கையையும், உலகம் போற்றும் விதமாக நந்தமிழ் நாடகக் கலை வளர்ச்சியுற வேண்டும் எனப்பேரவா கொண்டு, நாடகக்கலை மேன்மையுற அவர் ஆற்றிய பணிகள் எல்லாவற்றையும் எத்துணை விரித்துச் சொல்லினும் குறைவுடையதாகவே அமையும்.
திரைக்கலை வித்தகர் :
நாடகக்கலை வித்தகராக விளங்கிய தா.ஏ.ஞா. அவர்கள் திரைக்கலை வித்தகராகவுந் திகழ்ந்துள்ளார். தமிழ்ப்பேராசிரியராக, நாடகக்கலைப் படைப்பாளியாக, இலக்கிய ஆராய்ச்சியாளராக, கல்வியாளராகப் புகழ்பெற்ற தா.ஏ.ஞா. அவர்களைத் திரைக்கலை வித்தகராக மிளிரச் செய்தது அவர் கதையும் வசனமும் எழுதிய ‘கலையரசி’ திரைப்படமேயாம்.
தா.ஏ.ஞா. அவர்கள் அரிதின் முயன்று கதையும் வசனமும் எழுதிய கலையரசி என்னும் திரைப்படம் 19.04.1963-ஆம் நாள் வெளிவந்தது. இத்திரைப்படம் சரோடி பிரதர்ஸ் அவர்களின் வெளியீடாக, ஏ.காசிலிங்கம் இயக்க கே.வி. மகாதேவன் இசையமைப்பில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், ஆலங்குடி சோமு, முத்துக்கூத்தன் என்போர் பாடல்களைப் பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் பானுமதி இருவரும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
‘கலையரசி’ திரைப்படத்தின் கதை மிகவும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நுட்பமான கதையும் அறிவியல் நாவல் போன்றதுமாம். அக்காலத்திலேயே பறக்கும் தட்டுகள். வேற்றுகிரக வாசிகள், விண்வெளி, விண்கலம் இன்னோரன்னவற்றைத் தாம் கதையும் வசனமும் எழுதிய இத்திரைப்படத்தில் பயன்படுத்தி புதுமையைப் புலப்படத்தியுள்ளார் தா.ஏ.ஞா. அன்னார் அறிவியல் துறையில் கொண்ட பேரார்வத்திற்கும் புதுமை படைக்கும் கலையுள்ளத்திற்கும் இத்திரைப்படம் தக்க சான்று பகர்வதாக விளங்குகிறது.
எழுத்துப்பணி :
அன்பிற்கும், பண்பிற்கும் உறைவிடமான டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கள் தமிழாய்வில் தனியிடம் பதித்தவர்; படைப்பாற்றல் மிக்க தமிழறிஞர், சிந்தனைத்திறம் மிக்கவர். தம் சிந்தனைக்கு எழுத்துருவம் தந்த இலக்கிய ஆராய்ச்சி நூல்கள், நாடகங்கள், புதினங்கள், சிறுகதைகள் எனப் பல்துறை நூல்களையும். கலைக்கதிர் போன்ற திங்களேடுகளிலும், மலர்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். இங்ஙனம் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள டாக்டர் தா.ஏ.ஞா. அவர்கள், மூன்று புதினங்களும் சிறுகதைகளும் பல நாடகங்களும் கலைக்கதிர் திங்களேடு வாயிலாக வெளியிட்டுள்ளார். இவையாவும் தா.ஏ.ஞா. அவர்களின் தமிழாய்விற்கும் அவரின் நாடகக்கலை ஈடுபாட்டிற்கும் தக்க சான்று பகர்வனவாம்.
தா.ஏ.ஞா.வின் படைப்புக்கள்
நூல்கள் :
- 1) கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் பா.வே. மாணிக்க நாயக்கர் எழுதியது (முன்னுரையுடன் பதிப்பு) (1954)
- 2) பாவையின் உயிர்ப்பு (1957)
- 3) தெய்வஒளி (1958)
- 4) சிந்தாமணிச் செல்வம் (1960)
- 5) சக்கரங்கள் சுழல்வதேன் (1964)
- 6) அடிசிற்கினியாள் (1965)
- 7) A CRITICAL STUDY OF CIVAKACINTAMANI (சிந்தாமணி ஆராய்ச்சி) (1966)
- 8) நின்ற சொல்லர் (1970)
- 9) தமிழ்க் காப்பியங்களில் அவலவீரர்கள் (1973)
- 10) பொன்மலர் (1974)
- 11) சமணம் (1976)
- 12) இலக்கியத்திறனாய்வியல் (1980)
- 13) இலக்கியப் படைப்பியல் (1982)
- 14) யார்மகளோ! (1986)
- 15) நாடகத்திறன் (1987)
- 16) நடிப்புக்கலை.
நாடகங்கள் :
- 1) கடற்கரை (1949)
- 2) பெண்ணின் கண்ணீர் (1950)
- 3) வாழ்க்கைச்சுடர் (1951)
- 4) வைரமாலை (1953)
- 5) புதுவாழ்வு (1954)
- 6) சிவகாமி (1954)
- 7) தெய்வஒளி (1955)
- 8) பொன்மலர் (1955)
- 9) தெளிந்த நீரோடை (1955)
- 10) தெள்ளமுது (1956)
- 11) காமக்கண்ணி (1963)
- 12) அமராபரணம் (1964)
- 13) இராசேந்திரன் (1965)
- 14) படித்தவன் (1966)
- 15) செல்வமகன் (1969)
- 16) சுடரும் பொன் (1969)
- 17) உயிரோவியம் (1979)
- 18) கண்திறந்தது (1989).
புதினங்கள் :
- 1) சுழற்காற்று (1949)
- 2) காதல் படும்பாடு (1954)
- 3) முதிரமலைச்செல்வி (1961)
சிறுகதைகள் :
- 1) டாக்டரின் மனைவி (1963)
- 2) செல்வமகன் (1963)
- 3) கண்டிப்பு (1963)
- 4) நடிகை (1964)
- 5) அவர் வாழவேண்டும் (1964)
- 6) சூடாமலர் (1965)
- 7) நினைவுப்பரிசு (1970)
- 8) என் கண்கள் திறந்தன (1971)
- 9) நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் (1971)
இவையேயன்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நம் பேராசிரியரவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவை ஒரு பெருநூலாகத் தொகுத்தளிக்கும் பான்மையவாம். அன்றியும், இப்படைப்புகள் யாவும் நம் பேராசிரியரவர்களின் இறவாப் புகழுடைய எழுத்தோவியங்களாக; அவரின் பல்துறைப் புலமைக்குத் தக்க சான்றுகளாக; இம்மன்பதை எஞ்ஞான்றும் பயன்கொள்ளத்தக்கதாக; அவர் சால்பின் நிறைவுச் சான்றாக இவ்வையகத்தில் மிளிர்வனவாம்.
பட்டங்கள் :
தா.ஏ.ஞா.வின் தமிழ்ப்பணியைப் பாராட்டி 1972-ஆம் ஆண்டு மேத்திங்கள் 24-ஆம் நாள் பறம்பு மலையில் நடைபெற்ற வள்ளல் பாரி விழாவில் ‘குன்றக்குடி அடிகளார்’ இவருக்கு ‘நூலறிபுலவர்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். “புலமைமிக்கவரைப் புலமைதெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்” என்பது குன்றக்குடி அடிகளார் வழங்கிய பட்டத்தான் மெய்ம்மை ஆயிற்றன்றோ !
இவ்வாறே நாடகச்செம்மல், சிந்தாமணிச் செம்மல் என்னும் பட்டங்களும் தா.ஏ.ஞா.வைத் தேடி வந்தன. இங்ஙனம், பட்டங்கள் பெற்றத் தா.ஏ.ஞா. வை அவர்தம் மாணவர்கள் வணங்கி வாழ்த்தயபோது, “என்னை நீங்கள் பேராசிரியர் என்று மட்டும் அழைப்பதையே நான் பெருமிதமாக எண்ணுகிறேன். எல்லோருமே என்னை அப்படியே அழையுங்கள்” என்று தா.ஏ.ஞா. அவர்கள் மொழிந்தார், அவரின் கற்றறிந்தடங்கிய அடக்க உணர்வை அன்னாரின் மாணாக்கர் நெகிழ்ந்து போற்றுகின்றனர், சான்றோரின் இயல்பன்றோ இது !
பேச்சுத்திறம் :
தா.ஏ.ஞா. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொச்சையற்ற மொழியில் உரையாடுவார். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவார். ஆற்றொழுக்காகப் பேசுந்திறங்கொண்டவர்.
இவரின் சொற்பொழிவுகள் ‘கேட்டார் பிணிக்கும் தகை அவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’ என்னுந் தகைமையதாய் விளங்கும். நீள நெடிய வாக்கியங்களைப் பயன்படுத்தாது வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து, சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லும் திறம் படைத்தவர்.
சொற்களின் வலிமையை அறிந்து உரையாடும் தா.ஏ.ஞா. பிறர்மனம் நோகாமல் பேசுவார். வெளிப்படையாகவும் ஒளிவுமறைவின்றியும் பேசுவார். தம் உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்தாத தா.ஏ.ஞா. மாற்றுக் கருத்துடையோரிடமும் இனிதுற பழகுவார். பிறர் கூறும் கருத்துக்களில் தமக்கு உடன்பாடில்லை எனின் மறுத்துப் பேசாமல் வாளா இருந்துவிடுவார். புறங்கூறலை அறவே வெறுத்து ஒதுக்குவார். பகையறியாப் பண்புள்ளங் கொண்டவராதலின் பகையை வளர்த்துக் கொள்ளார். பகைமை பாராட்டுவோரிடமும் அன்பை வளர்க்க முனைவார். இங்ஙனமாகப் பேரருள் பேருள்ளங் கொண்ட பண்பினராய் ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தார்.
பெரும்பிரிவு :
‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற வாக்கிற்கிணங்க நள்ளிரவு வரை எழுதுவதும், ஓயாமல் உழைப்பதும் என இருந்த தா.ஏ.ஞா. அவர்கள். 1993-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12-ஆம் நாள் முதலே, நெஞ்சு வலியால் மிகவும் சோர்வோடு காணப்பெற்றார். தாம் உற்ற துன்பத்தை துணைவியாரிடமுங் கூடத் தெரிவிக்காமல் மறைத்துக் காத்து வந்தார். பிப்ரவரி 14-ஆம் நாள் தா.ஏ.ஞா. வின் உடல்நிலை மிகவும் சீர்கேடடைந்தது. மரகதம் அம்மையாரும், மருமகளார் திருமதி. சுனந்தினி அவர்களும் உடனடியாக தா.ஏ.ஞா வை மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். மருத்துவமனையில் தா.ஏ.ஞா- விற்கு உரிய மருத்துவம் பார்க்கப்பட்டது.
பிப்ரவரி 21-ஆம் நாள் தா.ஏ.ஞா வின் உடல்நிலை மிகவம் சீர்கேடடைந்தது. உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் பலவகையாலும் ஆய்ந்து தக்க மருத்துவம் மேற்கொண்டனர். 22-ஆம் நாள் தா.ஏ.ஞா. வின் உடல்நிலை சீரானது. அனைவரும் மகிழ்ந்தனர். உறவினர்களும், புதல்வர்களும் இல்லத்திற்கு திரும்பினர். ஆனால், அன்றிரவு தா.ஏ.ஞா. வின் உடல்நிலை மிகவும் மோசமானது. தா.ஏ.ஞா. வை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. 23-ஆம் நாளன்று தா.ஏ.ஞா. வின் உடல்நிலை சரிப்படுத்த இயலாத அளவிற்குப் போய்விட்டது. பேச்சொடுங்கினார்; அதிகாலை 3.00 மணிக்குத் (23.02.1993) தொல்லை ஏதுமின்றி மூக்சொடுங்கினார்! அன்னாரின் நல்லுயிர் அமைதியுற்றது!
ஆரவாரமிகுந்த சென்னை மாநகரில் ‘தெய்வஒளியாய்ப்’ பிறந்து தெவிட்டாதத் ‘தெள்ளமுதாய்த்’ தமிழறிவித்து, மாணவர் பலரின் வாழ்க்கையில் ‘வாழ்க்கைச்சுடராய்’ ஒளிவிளக்கேற்றி, ‘நின்றசொல்லராய்’ அனைவர் மனத்திலும் நிறைந்து ‘பொன்மலராய்’ அன்பாகிய நறுமணத்தை எங்கும் வீசி, ஆரவாரம், ஆடம்பரம் எதுவும் தம்மை அணுகவிடாத ‘தெளிந்த நீரோடையாய்’ வாழ்ந்த தா.ஏ.ஞா. அவர்களின் வாழ்வு ‘புதுவாழ்வு’. இனி அந்த வாழ்வினை அன்னாரின் பற்பல நூல்களும் பரப்பிவரும் என்பது திண்ணம்.
“ நீ ஒரு பொன்மலர் அன்பாகிய நறுமணத்தை
எங்கும் வீசுகின்ற அழகான பொன்மலர் !” (பொன்மலர்)
“நீங்கள் தெளிந்த நீரோடை ! எப்படிக் காற்று, புயல் இவைகளுக்கெல்லாம் கலங்கிடாமல் -ஆரவாரமில்லாமல் - அமைதியாக அது போகிறதோ அதுபோல அமைதியாகச் சிறந்த பண்போடு நடந்து கொள்கிறீர்கள்” -
(தெளிந்த நீரோடை).
*****************
முதன்மைச்சான்று மூலம் :
விக்னேசு.வே. - ‘டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி அல்லது வாழ்வியல் வழிகாட்டி’ மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை – 8.
முதற்பதிப்பு – பிப்ரவரி - 2016