Pages

Saturday, December 7, 2019

புதிய தமிழாய்வுக்களங்களும் நெறிமுறைகளும்


 பூ .சா . கோ . கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641014
PSG CARE EMPOWERMENT PROGRAMME
தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு)
புதிய தமிழாய்வுக்களங்களும் நெறிமுறைகளும்
இரண்டு நாட்கள் பயிலரங்கம்







                 பூ .சா .கோ . கலை அறிவியல் கல்லூரியும்,  பூ.சா.கோ கல்வியியல் மற்றும் ராய்ச்சித்திறன் மேம்பாட்டு மையமும் (PSG CARE) இணைந்து 27-11-2019 மற்றும் 28-11-1019 ஆகிய இரண்டு நாட்கள்புதிய தமிழாய்வுக்களங்களும் நெறிமுறைகளும்என்ற தலைப்பிலான இரண்டு நாள் ஆய்வுத்திறன் மேம்பாட்டு  பயிலரங்கம் கல்லூரியின் சங்கமம் அரங்கில்  காலை 10 மணியளவில் நடைபெற்றது. பயிலரங்கத்தின் முதல் நாளான  27-11-2019 அன்று முதல்வர் முனைவர் து. பிருந்தா அம்மையார் அவர்கள் வாழ்த்துரை வழங்கியபோது மொழிப்பின்புல அறிஞர்களின் நல்வழிகாட்டுதலின் பேரில்தான் இன்றைய சிறந்த ஆய்வுக்களத்தை விரிவு செய்ய முடியும் என்றார்.      
    அடுத்து வாழ்த்துரை வழங்கிய பூ.சா.கோ கல்வி ஆய்வுத்திறன் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ர.ருத்ரமூர்த்தி ஐயா அவர்கள் பேசுகையில்  கல்லூரி ஆசிரியர்கள்  தமிழாய்வு நெறிமுறைகள் பற்றிய அறிவை வளர்ப்பதற்கு இது போன்ற பயிலரங்கங்கள்தான் துணைபுரிகின்றன. தமிழ்மொழியின் பின்னடைவு இன்றைய சமூகத்தின் எதார்த்தமாக இருக்கிறது. அதனைத் தகர்த்து நம்மை மொழியோடு இணைக்கின்ற நல்ல மொழிபெயர்ப்புகளையும், புதிய தொழில் நுட்பங்களையும் அறிவியலோடு பொருத்திப்பார்க்கின்ற பரந்த ஆய்வுக்களத்தைத் தமிழில் உருவாக்க வேண்டும் என்று கூறி தமிழ் ஆய்வுப்புலத்தின் நோக்கத்திற்கு ஓர் சிறந்த கருத்தைப் பதிவு செய்தார். துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் அ. அங்குராஜ் அவர்கள் உரையாற்றிய போது தமிழ்மொழியைப் பாடமாக மட்டுமல்லாமல் வாழ்க்கையாகப் பார்க்கின்ற நல்ல மன நிலையை இன்றைய சமூகத்திற்குக் கொடுக்கின்ற  உயர்ந்த விழுமியக் கல்வியே ஆராய்ச்சியாகும் என்ற சிறந்த வாழ்த்துரையை வழங்கினார்.
     தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல்அமர்வு தொடங்கியது. அமர்வுத் தலைவர் புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின்  மேனாள் பேராசிரியர் 
முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள் 
பின் காலனித்துவக் கோட்பாடுகள் என்ற தலைப்பிலான ஆய்வுப் பின்புலத்தைத் தொகுத்துரைத்தார். ஒவ்வொரு எழுத்துப்பிரதியையும் வாசிக்கும் கோணம் மாறவேண்டும் அதற்குள் மறைந்துள்ள சமூக அரசியலைத்தேடி கேள்வி எழுப்பும்  அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.பழைய இலக்கியங்களைப் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்யவேண்டும் எல்லா கருத்துக்களும் குறிப்பிட்ட சூழல்கள் சார்ந்தது.எண்ணங்களும் கருத்துகளும் மாறும்; மாறாது என்றெல்லாம் நம்மால் தீர்மானிக்கமுடியாது.இயற்கை விதித்த நியதிகளை நாம் நம் தேவைக்கேற்ப உரிமையாக்கிக் கொண்டதன் விளைவாகத்தான் சமூகத்தின் குற்றங்கள் அதிகமாகின்றன. குற்றங்களைத் தவிர்க்க இன்றைய விளம்பர யுக சூட்சமங்களில் உள்ள காலனித்துவ அடிமை வாழ்வை மிக நுண்ணிய பார்வையில் ஆய்வு செய்யவேண்டும். புதிய ஆய்வுக்களங்களை உருவாக்குவதற்கும் தேடுவதற்குமான கோட்பாட்டு அறிவுகளை நல்வழிகாட்டியாக  கைப்பற்றுதல் வேண்டும்.சங்க இலக்கியம்  2000 ஆண்டுகள் பழமையானது என்ற ஆய்வாளர்களின் கருத்தை இன்றைய கீழடி ஆய்வு இன்னும் முன்னுக்குச் சென்று கி.மு 5மற்றும் 6 ஆம் நூற்றாண்டு என்று பதிவு செய்திருப்பது ஆய்வுக்கான மிக முக்கியத் தளமாக  எடுத்துக்கொள்ளலாம் என்று பரந்துபட்ட ஆய்வியல் நெறிகளை விளக்கினார்.
     முதல் நாள் பயிலரங்க நிகழ்வு  குறித்து தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் .முனைவர் கோ.வசந்திமாலா, முனைவர் ச. பால்ராஜ் மற்றும் அரசு உதவிபெறும் பிரிவுத் தமிழ்த்துறையிலிருந்து முனைவர்  பொ..சுதா அவர்களும் தங்களுடைய கருத்துக்களைப் பின்னூட்டமாக வழங்கினர்.
         இரண்டாம் நாள் அமர்வில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு மையத்தின்  மேனாள் பேராசிரியர் 
முனைவர் பக்தவத்சலபாரதி அவர்கள் இலக்கியங்களில் மானுடவியல் மற்றும் இனவரைவியல் அணுகுமுறைகள்  


என்ற தலைப்பிலான விவாதங்களை முன் வைத்துப் பேசினார். தமிழை விடவும் அதிகக் கிளை மொழிகளைக் கொண்டது  கோண்டு மொழி என்று கூறுகையில் மொழிப் பின்புலத்தின் நீட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. தமிழ் மொழியின் தொன்மையும் நீண்ட நெடிய அறுபடாத மரபுத் தொடர்ச்சியின் பலமும்தான்   தமிழ்க்குடிகளின் பண்பாட்டுச்சின்னங்களாக  நின்று நிலைத்திருப்பதற்குக் காரணம் என்றார்.  வாழ்வியலுக்கான  வரைவியல்களை தனிச்சமூகத்திற்குச் கொண்டு கொடுத்தவர்கள் தமிழ் மரபுக்குடிகள். தமிழ் இனவரைவியியலின் செல்நெறிகள் பலபடி நிலைகளைக் கொண்டது. தமிழ் மரபானது பழைய கற்காலம், இடைக் கற்காலம், நவீனக் காலம்,செப்புக்காலம், வரலாற்றுக்காலம் என ஆய்வுப்போக்குகளைப் பாகுபடுத்தி ஆய்வுக்களங்களுக்குத் தக்கபடி வரையறை செய்து மரபு நீட்சிப் பார்வையில் நோக்க வேண்டியது இன்றைய ஆய்வுத் தேவையாகும் என்ற அவருடைய உரை இனவரைவியல் அடிப்படையிலான ஆய்வியல் அணுகுமுறைகளுக்கு வழிகாட்டியாக விளங்கியது.                                      
        இரண்டாம் நாள் பயிலரங்க நிகழ்வு  குறித்து தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் முனைவர் து.ராஜம்மாள். மற்றும் அரசு உதவிபெறும் பிரிவுத் தமிழ்த்துறையிலிருந்து முனைவர்  கந்தசுப்ரமணியம்  அவர்களும் தங்களுடைய கருத்துக்களைப் பின்னூட்டமாக வழங்கி விழாவுக்கு வலுவூட்டினர். மேலும் கருத்தரங்க விவாதத்திற்கு அரசு உதவிபெறும் பிரிவுத் தமிழ்த்துறையிலிருந்து துறைத்தலைவர் முனைவர் சோ.பத்மாவதி மற்றும் முனைவர் ச.இரவி ஆகியோர் ஆழமான கேள்விகளை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் ஆய்வுக்குரிய புதிய தளங்களையும் உருவாக்கிச் சிறப்பித்தனர். நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ம.அருட்செல்வன் நன்றியுரை நல்கினார். இப்பயிலரங்கத்திற்கு  ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ்த்துறைத் தலைவர்கள் முனைவர் இரா.ஜெயந்தி மற்றும் முனைவர் ச.அருள்செல்வி ஆகியோர் செயல்பட்டு பயிலரங்க நோக்கத்தினைச் செம்மையாக நிறைவேற்றினர்.



No comments:

Post a Comment

கணித்தமிழ்த் திருவிழா

  தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிதி நல்கையுடன் நம் கல்லூரியில் செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக நிகழும் கல்லூரி அளவ...